க்ரைம்

கிழக்கு கடற்கரைச் சாலையில் கத்திமுனையில் இளைஞரிடம் நகை பறித்த 4 பேர் கும்பல் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையில் இளைஞரிடம் கத்திமுனையில் நகையை பறித்த 4 பேர் கும்பலை நீலாங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (30).இவர் சென்னையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். இந்நிலையில், இவர் கடந்த 9-ம் தேதி தனது திருமண அழைப்பிதழை உறவினர் வீட்டில் கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை சோதனைச்சாவடி அருகே இரவு 10 மணி அளவில் சென்றபோது, ஆட்டோவில் வந்த 4 பேர் சந்தோஷை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, ஆட்டோவில் தப்பினர்.

இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் சந்தோஷ் புகார் கொடுத்தார். அதன்படி, குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக, சம்பவ இடத்தின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி, கொள்ளையர்கள் தப்பிய ஆட்டோவின் பதிவு எண் மற்றும் அடையாளங்களை வைத்து, நகை பறிப்பில் ஈடுபட்டது சென்னை பனையூர் சிவகுமார்(23), உமர்பரூக் (25), கண்ணகி நகர் கார்த்திக் (29), கே.கார்த்திக் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT