சென்னை: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த்(60), அவரது மனைவி அனுராதா(55) ஆகியோரைக் கொன்று புதைத்து, ரூ.5 கோடி மதிப்பிலான 1,000 பவுன் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில், கொலையாளி கிருஷ்ணாதான் என்பதை உறுதிசெய்த போலீஸார், உடனடியாக சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் அவரது செல்போன் மற்றும் காந்தின் காரில் உள்ள ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்தனர். அப்போது, கிருஷ்ணா சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி, சூளைமேடு, பாடி வழியாக ஆந்திரா சென்று, அங்கிருந்து நேபாளம் தப்பிச் செல்ல திட்டமிட்டதை போலீஸார் உறுதி செய்தனர்.
தொடர்ந்து, ஆந்திரா போலீஸாரைத் தொடர்பு கொண்டு, கொலையாளி தப்பிச் செல்லும் தகவலைத் தெரிவித்தனர். அதேசமயம், காரின் எண்ணைக் கொடுத்து, அந்தக் கார் எந்தெந்த சுங்கச்சாவடிகள் வழியாகச் செல்கிறது என்பதையும் கண்காணித்தனர்.
மேலும், எந்த பெட்ரோல் பங்கில், எவ்வளவு பெட்ரோல் போடுகின்றனர். அதன் மூலம் எத்தனை கிலோமீட்டர் தொலைவு செல்லமுடியும் எனவும், ஒருவேளை காரை நிறுத்திவிட்டு, கொள்ளையடித்த பொருட்களுடன் ரயில் அல்லது பேருந்தில் தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக பேருந்துமற்றும் ரயில் நிலையத்தையொட்டியுள்ள போலீஸாரையும் சென்னை தனிப்படை போலீஸார் உஷார்படுத்தியிருந்தனர்.
இதற்கிடையில், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையர் குமரகுருபரன் விமானம் மூலம் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கிருஷ்ணாவையும், அவரது நண்பரையும் சுற்றி வளைத்த ஆந்திர போலீஸார், குமரகுருபரனிடம் ஒப்படைத்தனர்.
கொலையாளி கிருஷ்ணாவின் திட்டம், ஸ்ரீகாந்த் வீட்டின் கொத்துச் சாவியை அவரிடமிருந்து பெறுவதேயாகும். திட்டமிட்டபடி வீட்டுக்கு வந்தவுடன், கொத்துச்சாவியைக் கேட்டு மிரட்டியுள்ளார்.
அவர் கொடுக்க மறுத்ததால், தான் கொண்டுவந்த மண்வெட்டியின் கைப்பிடியால் தாக்கி கொலை செய்து, கொத்துச்சாவியைப் பறித்து, லாக்கர்களை திறந்து, நண்பருடன் சேர்ந்து கொள்ளையடித்துள்ளார். மேலும், காந்தின் செல்போனை எரித்துள்ளனர்.
காந்த் மற்றும் அனுராதா இருவரையும் கொலையாளிகள் முதலில் தலையில் தாக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர், கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். தொடர்ந்து, சடலங்களை காரில் எடுத்துச் சென்று, போர்வையில் சுற்றி, குழியில் புதைத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.