கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் எட்வின் ஜோசப். இவர், கடந்த 26-ம் தேதி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘கடந்த 26-ம் தேதி எனது காரில் ரூ.6.90 லட்சம் தொகையை வைத்துவிட்டு, கோவை சாலையில் உள்ள ஒரு மருந்துக் கடை அருகே வந்துகொண்டிருந்தேன். அப்போது இளைஞர் ஒருவர், எனது வாகனத்தின் டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக கூறினார். வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி நான் டயரை பார்த்த சமயத்தில், 3 மர்மபர்கள் காரில் இருந்த ரூ.6.90 லட்சம் தொகையை கொள்ளையடித்துவிட்டு, தப்பியோடினர். இதுதொடர்பாக போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என தெரிவித்திருந்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், பணத்தை கொள்ளையடித்து சென்றவர்கள் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ், சங்கர், அஜய், நந்து ஆகியோர் என தெரிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த 4 பேரையும், போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.14.01 லட்சம் ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸார் கூறும்போது, ‘‘கர்நாடகாவை சேர்ந்த இவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பமாக விடுதியில் தங்கியிருந்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை நோட்டமிடுவர். பின், பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிடுவர். இவர்கள் எந்தெந்த பகுதியில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,’’ என்றனர்.