திருநின்றவூரில் வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்றவரின் கவனத்தை திசை திருப்பிரூ.1 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், அம்பிகாபுரம் முதல்பிரதான சாலையில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் கட்டிட லேபர் கான்டிராக்ட் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், தியாகராஜன் நேற்று திருநின்றவூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் இருந்து ரூ. 1 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தனது பைக்கின் முன்பக்கத்தில் உள்ள டேங்க் கவரில் வைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.
அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், தியாகராஜனின் அருகில் வந்து உங்களுடைய பணம் ரூ.50 கீழே விழுந்துள்ளதாகக் கூறினர். இதையடுத்து, தியாகராஜன் பைக்கை நிறுத்தி விட்டு கீழே சிதறிக் கிடந்த 5 பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பைக்கில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, தியாகராஜன் உடனடியாக போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து பார்த்தபோது, தியாகராஜன் பைக்கில் பணத்தை எடுத்துச் சென்றதை அறிந்த 2 பேர், பின்னால் பைக்கில் வந்து அவரது கவனத்தைத் திருப்பி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.