திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே பேட்டை ஆதம்நகர் பகுதியில் எரிந்த நிலையில் பெண்உடல் கிடப்பதாக, பேட்டை போலீஸாருக்கு கடந்த 3-ம் தேதி தகவல் வந்தது. போலீஸார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்,எதற்காக எரித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில், பழையபேட்டை கிருஷ்ணபேரியைப் சேர்ந்த பொன் ஆறுமுகம்பிள்ளை மனைவி மாரியம்மாள் (30), அவரது சகோதரியான செக்கடித்தெரு லெட்சுமணன் மனைவி மேரி(38) ஆகியோரை பேட்டை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களது பாட்டி சுப்பம்மாளை (90) பேத்திகள் இருவரும் பராமரித்து வந்தனர். மூதாட்டியைத் தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக, அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, கடந்த 3-ம் தேதி சுப்பம்மாளை ஆட்டோவில் ஆள் அரவமற்ற ஆதம்நகர் விரிவாக்கப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்டோவை அனுப்பி வைத்துவிட்டு, பாட்டியை இருவரும் சேர்ந்து எரித்துக் கொன்றது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.