சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அளித்த விருந்தின்போது, பிரியாணியுடன் தங்கம், வைர நகைகளை விழுங்கிய இளைஞர் பிடிபட்டார். சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் தாட்சாயணி(34). நகைக் கடையில் வேலை செய்து வருகிறார்.
விருந்துக்கு வந்த நண்பர்
இவர், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தனது நகைக்கடை மேலாளர் சாராவை விருந்துக்காக வீட்டுக்கு அழைத்தார். மேலாளர் சாரா, தனது நண்பர் நுங்கம் பாக்கம் சையத் முகமது அபுபக்கருடன் தாட்சாயணி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
விருந்து முடிந்து இருவரும் சென்ற பின்னர், வீட்டில் உள்ள பீரோ திறக்கப்பட்டு, தங்கம், வைரநகைகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, மேலாளர் சாராவுடன் வந்த நபர் மீது தாட்சாயணிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஸ்கேனில் தெரிந்த நகைகள்
இதுகுறித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தியதில், சையத்முகமது அபுபக்கர் நகையைத் திருடி விழுங்கிவிட்டு, பிரியாணியையும் சாப்பிட்டுச் சென்றது தெரியவந்தது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நகைகளை மீட்ட போலீஸார், அவற்றை தாட்சாயணியிடம் ஒப்படைத்தனர்.
நகைகள் கிடைத்ததே போதும். மேல் நடவடிக்கை தேவையில்லை என்று தாட்சாயணி போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. விருகம்பாக்கம் போலீஸார் சையத் முகமது அபுபக்கரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.