க்ரைம்

பைக் ரேஸில் ஈடுபடுவோர் கைது: காவல் ஆணையர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ‘பைக் ரேஸ்’ என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து, சட்டம்-ஒழுங்கு போலீஸார், ஆயுதப்படை போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் நேப்பியர் பாலம் முதல் அடையாறு திரு.வி.கா.பாலம் வரையிலும் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ஜிஎஸ்டி சாலை, வண்ணாரப்பேட்டை மின்ட் மற்றும் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, “இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி, சாகசத்தில் ஈடுபட வேண்டாம். இதை மீறி பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் கைது நடவடிக்கையும் பாயும்.

மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT