க்ரைம்

கூடுவாஞ்சேரி அருகே வியாபாரியை சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டிய மூன்று பேர் கும்பல்

பெ.ஜேம்ஸ்குமார்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே வியாபாரியை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம், அண்ணா நகர், குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் பாரத்(28). இவர் அண்ணா நகர் பிரதான சாலையில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு பாரத் வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக தாக்கினர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் பாரத்தை வெட்டினர். இதில் அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. உயிருக்கு பயந்து பாரத் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனிடையே அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் பாரத்தை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது குறித்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். வியாபாரி மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT