விருதுநகரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகரில் உள்ள கண்ணாடி கடை ஒன்றில் அல்லம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவர்களுக்கு 14 வயது, 13 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் விருதுநகரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படிக்கின்றனர். மூத்த மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மூத்த மகள் கடந்த ஜனவரி மாதம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது அவரை தந்தையே கடந்த 3 மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தந்தையின் தொல்லை தாங்காமல் பாதிக்கப்பட்ட சிறுமி, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடிதம் எழுதி வைத்தார். பள்ளிக்குச் சென்றபோது அந்த கடிதம் பள்ளி வளாகத்தில் தவறி விழுந்தது. அக்கடிதம் தலைமை ஆசிரியையின் கைக்கு கிடைத்தது.
அதைப் படித்து அதிர்ச்சி யடைந்த தலைமை ஆசிரியர் சிறுமியின் தாயை பள்ளிக்கு அழைத்துள்ளார். அவர் முன் சிறுமியிடம் விசாரித்தபோது தந்தையின் பாலியல் வன்கொடுமையை சிறுமி கூறி அழுதுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீஸார் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்து விசாரிக்கின்றனர்.