க்ரைம்

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா 2.0 வேட்டையில் 36 பேர் கைது

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ல் 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 சோதனை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. ஒரு மாதம் நடைபெற்ற தீவிர சோதனையில் மாவட்ட அளவில் புதிய சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

இதில், வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையொட்டி உள்ள பொன்னை, கிறிஸ்டியான்பேட்டை, சைனகுண்டா சோதனைச்சாவடியில் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் மோப்ப நாய் சிம்பாவை கஞ்சா கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தினர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அரசுப் பேருந்துகளில் கடத்தப்பட்ட கஞ்சா பார்சல்கள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டன. ரயில்கள், பேருந்துகள், வாகனங்களில் கடத்தப்பட்ட கஞ்சா பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா கடத்தல் தொடர்பாக மாவட்டத்தில் ஏப்ரல் 29-ம் தேதி வரை மொத்தம் 31 வழக்குகளில் 36 பேர் கைது செய்யப்பட்டு 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் என கூறப்படுகிறது. கஞ்சா கடத்தல் தொடர்பாக 2 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல், குட்கா கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் ஏப்ரல் 29-ம் தேதி வரை மொத்தம் 153 வழக்குகளில் 168 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.26 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 3,216 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளுடன் 11 வாகனங்களையும் பறிமுதல் செய் துள்ளனர்.

‘‘வேலூர் மாவட்டத்தைப் பொருத்த வரை கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் தொடர்பான சோதனை தொடரும்’’ என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT