தோழியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக செங்கல்பட்டு சட்டகல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பேராசிரியர் கௌரி ரமேஷ் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் பகுதியைச் சேர்ந்த கவிப்பிரியா (19) செங்கல்பட்டு சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் இரண்டாவது மாடியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸார் உடன் தங்கியிருந்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் மன உளைச்சலுக்கு சக மாணவிகளிடம் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதாவது நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின் கவிப்பிரியாவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தபோது, அவர்கள் மகளின் உடலைப் பெற மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: இறந்த கவிப்பிரியா தனது நெருங்கிய தோழி ஒருவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால், மாணவி, செய்வதறியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்த திருவள்ளூர் மாவட்ட புதூர் கிராமத்தைச் சேர்ந்த கவிப்பிரியா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்றால் அதற்கான காரணம் குறித்து ஆராயவேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தலையிட்டு, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாணவி கவிப்பிரியாவின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும் முதல்வர் ஆணையிட வேண்டும். இவ்வாறுஅவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி (புதுப்பாக்கம்) முதல்வர் பேராசிரியர்கௌரி ரமேஷ் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் அறிவித்துள்ளார்.
மேலும் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே விசாரணைக்கு கல்லூரி சார்பாக முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.