க்ரைம்

தஞ்சை | பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை; 4 இளைஞர்கள் கைது: பஞ்சாயத்து பேசிய முன்னாள் ஊராட்சித் தலைவர் உட்பட மேலும் 3 பேர் சிக்கினர்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் (22) ஒருவர் தஞ்சையில் ஒரு கடையில் பணிபுரிகிறார். இவர், ஏப்.11 இரவு பணி முடிந்து,பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அவருடன் பள்ளியில் படித்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கொடியரசன்(25), அப்பெண்ணைஊரில் இறக்கிவிடுவதாகக் கூறி, மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டார்.

சரியான வழியில் செல்லாமல்வேறு பாதையில் சென்ற கொடியரசன் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த அவரது நண்பர்கள் சாமிநாதன்(24), சுகுமாரன் (25),கண்ணன்(25) ஆகியோர் கொடியரசனுடன் சேர்ந்து அந்தப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.பின்னர் அந்தப் பெண்ணை அவரது வீட்டுக்கு அருகில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வல்லம் போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து,தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அப்பெண்ணை பரிசோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து எஸ்பி ரவளிப்பிரியா உத்தரவின்பேரில் தனிப்படையினர், ரங்கத்தில் பதுங்கியிருந்த கொடியரசன் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கில் கொடியரசனுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசியதாக குருங்குளம் மேற்கு முன்னாள்ஊராட்சி மன்றத் தலைவர் வேலுச்சாமி மற்றும் செல்லத்துரை, தமிழரசன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையே, நேற்று வல்லம்காவல் நிலையம் முன்பு பொய்வழக்கு எனக் கூறி சிலர் தங்கள்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT