புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள ஆவுடையார்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாம்(55). முன்னாள் ஜமாத் தலைவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி ஆயிஷா பீவி(50). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன்கள் 2 பேரும் கறம்பக்குடியில் ஆப்டிக்கல்ஸ் கடை வைத்துள்ளனர். இதனால் ஆவுடையார்பட்டினத்தில் உள்ள வீட்டில் முகமது நிஜாமும், ஆயிஷா பீவியும் மட்டும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வீட்டின் சுற்றுச்சுவரின் மீது ஏறிக்குதித்து உள்ளே புகுந்த 3 பேர், வீட்டின் முன்வாசலில் இருந்த முகமது நிஜாமை கட்டிப்போட்டு, கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ஆயிஷா பீவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரையும் கட்டிப் போட்டு, அவரிடமிருந்து லாக்கரின் சாவியை வாங்கி, அதில் இருந்த 170 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர், ஆயிஷா பீவியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று, ஆயிஷா பீவியை மீட்டதுடன், மணமேல்குடி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மணமேல்குடி போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். பின்னர், மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
மோப்ப நாய், கைரேகை நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.