பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கருமாபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (44). அதே பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால் மாணிக்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். அதன்பேரில், பொள்ளாச்சி தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து மாணிக்கத்தை நேற்று காலை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, மாணிக்கம் தப்பி ஓடிவிட்டார். மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மாணிக்கத்தை போலீஸார் தேடி வந்தனர்.
மாலையில் பாலக்காடு சாலை வழியாக கருமாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு செல்லும் வழியில், மாணிக்கத்தை போலீஸார் பிடித்தனர். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.