தஞ்சாவூர்: தங்கை உறவு முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்த இளைஞரை அடித்துக் கொன்ற மாணவியின் உறவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள வாளமர்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(21). ஐடிஐ படித்துள்ளார். இவர், தங்கை உறவு முறை கொண்ட பிளஸ் 2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால், இருவீட்டாரும் ஆனந்தை கண்டித்துள்ளனர். ஆனால், ஆனந்த் தனது காதலை விடவில்லை.
இந்நிலையில், சூரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவியின் உறவினரான உதயகுமார்(31) நேற்று அதிகாலை கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால் அருகே நின்று கொண்டிருந்த ஆனந்தை அழைத்து, கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த உதயகுமார் அங்கு கிடந்த மண்வெட்டியால் ஆனந்தை தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஆனந்த் அந்த இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த தஞ்சை தாலுகா போலீஸார், வழக்குப்பதிவு செய்து உதயகுமாரையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் தந்தையையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.