சென்னை: சென்னை பல்லாவரம் சந்தைக்கு செடிகள் வாங்க வந்த பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பல்லாவரம் சந்தை: ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் பல்லாவரம் சந்தை மிகவும் பிரபலமானது. ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி, கலை பொருட்கள் சேகரிப்பாளர்கள் உள்பட பலரும் வாரந்தோறும் நடைபெறும் இந்த சந்தையில் பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம். கத்தரிக்காய் முதல் கணினி வரை எதையும் வாங்கிவிட முடிந்த பல்லாவரம் சந்தை நடைபெறும் நாளில் சென்னை மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பாதுகாப்புப் பணிகளில் போலீஸார் ஈடுபடுவர்.
செல்போன் திருட்டு: சந்தையின் பாதுகாப்புப் பணியில் எப்போதும் போலீசார் இருப்பார்கள். ஆனால் இன்று, சென்னை திரும்பும் ஆளுநரின் பாதுகாப்பு பணிக்காக விமான நிலைய பந்தோபஸ்து பணிக்குச் சென்றுவிட்டதால், இன்று இதுவரையில் பல்லாவரம் சந்தையில் 7 செல்போன்கள் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தையில் செடிகள் வாங்குவதற்காக, பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வந்திருந்தார். அவரது செல்போனையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அந்த செல்போனின் விலை ரூ.1 லட்சம் எனக் கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் புகார்: புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்ட செல்போனை இழந்தவர்கள் அனைவரும். பல்லாவரம் காவல் நிலையத்தில் இந்த திருட்டுச் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுவாகவே இந்த சந்தையில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பது வழக்கம் என்றாலும், காவல்துறையினர் பெரும்பாலான சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்வதில்லை என்று பொதுமக்கள் பலர் கூறுகின்றனர்.