கோவை: கோவை சிங்காநல்லூரில் விலை மதிப்புள்ள இரிடியம் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன்(60). இவர், கோவை சிங்காநல்லூர் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
எனக்கு செல்போன் தொடர்புகள் மூலம் முருகானந்தம், கண்ணப்பன் உள்ளிட்ட சிலர் அறிமுகமாகினர். அவர்கள் தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் உள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.1 கோடி எனவும் தெரிவித்தனர். மேலும், தற்போதைய அவசர சூழல் காரணமாக ரூ.30 லட்சத்துக்கு அதை விற்பனை செய்கிறோம் எனக் கூறினர். இதையடுத்து நான் அந்த பொருளை வாங்குவதாக தெரிவித்தேன்.
அவர்கள், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே வந்து பொருளை பெற்றுக் கொள்ளுமாறு கூறினர். அதன்படி, நான் சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ரூ.30 லட்சத்துடன் தங்கியிருந்தேன். சிறிது நேரத்தில் இரண்டு பேர் அறைக்கு வந்தனர். முருகானந்தம் அனுப்பியதாக கூறி ஒரு பையை என்னிடம் தந்து, அதில் இரிடியம் உள்ளதாக கூறி, ரூ.30 லட்சத்தை வாங்கிச் சென்றனர். அவர்கள் சென்ற பின்னர், நான் பையை திறந்து பார்த்தேன். அதில் ஒரு செங்கல் மட்டும் இருந்தது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
முருகானந்தம், கண்ணப்பன் உள்ளிட்ட சிலர் மீது சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.