புதுச்சேரி: உறவினர் மகளான பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஊட்டியைச் சேர்ந்த நெருங்கிய உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஊட்டியைச் சேர்ந்தவர் இமான்ராஜ் (28). இவரது நெருங்கிய உறவினர் குடும்பத்தினர் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்திலுள்ள ஒரு நகரில் இருந்தனர். டைல்ஸ் மற்றும் பெயின்டர் பணிக்காக கடந்த 2014-ல் புதுச்சேரிக்கு இமான்ராஜ் வந்துள்ளார். அவர் தங்கி இருந்த வீட்டின் உறவினர் மகளான பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அதில் மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பாதிப்புக்கு உள்ளானது தெரியவந்தது.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் கடந்த 2016-ல் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். அந்தப் புகாரின் பேரில் ஆய்வாளர் நாகராஜ் உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து இமான்ராஜ் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு புதுவை சிறப்பு நீதிபதி செல்வநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்து ஆறு ஆண்டுகள் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இமானுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார். இழப்பீடாக மாணவிக்கு ரூ.4 லட்சம் தர நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.