க்ரைம்

ஈரோடு பெண் காவல் ஆய்வாளரின் டார்ச்சர் குற்றச்சாட்டு விசாரணை நிறைவு

செய்திப்பிரிவு

ஈரோடு: உயர் அதிகாரிகள் டார்ச்சர் என ஈரோடு பெண் காவல் ஆய்வாளரின் குற்றச்சாட்டு குறித்த விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், விசாரணை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஈரோடு எஸ்பி சசிமோகன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவர், உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக, தான் தற்கொலை செய்து கொள்வதாக கடந்த வாரம், காவல்துறை அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவில், எஸ்பி மற்றும் மற்றொரு பெண் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு ஆகியோர் தன்னை டார்ச்சர் செய்ததாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து விசாரிக்க ஈரோடு நகர டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் விசாரணை குழுவினை எஸ்பி சசிமோகன் அமைத்தார். இக்குழுவினர் பெண் காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு ஏட்டு உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு அந்த அறிக்கையை எஸ்பி சசிமோகனிடம் தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து எஸ்பி கூறும்போது, பெண் ஆய்வாளர் புகாரின் பேரிலும், பெண் ஆய்வாளர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

SCROLL FOR NEXT