தஞ்சாவூர்: முகநூல் வழியாக அறிமுகமான நபர் வெளிநாட்டில் இருந்து பரிசுப் பொருட்கள் அனுப்புவதாகக் கூறி ரூ.8.56 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டதாக தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீஸில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் சேவியர்பிச்சை மகன் அலெக்சாண்டர்(40). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது, இவருக்கு முகநூல் வழியாக ஒருபெண் அறிமுகமாகி உள்ளார். முகநூல் வழியாகவே பேசிய அந்த பெண், தான் வெளிநாட்டில் இருந்து பரிசுப் பொருட்களை அனுப்புவதாகவும், அதை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என்றும் கூறி, பட்டுக்கோட்டையில் உள்ள அலெக்சாண்டரின் முகவரி மற்றும் அவரது மனைவியின் செல்போன் எண் ஆகியவற்றை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், கடந்த பிப்.12-ம் தேதி அலெக்சாண்டரின் மனைவி செல்போன் எண்ணுக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர் தொடர்புகொண்டு, “நாங்கள் ஏர்போர்ட் பார்சல் சர்வீஸில் இருந்து பேசுகிறோம். உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்துள்ளது. அதைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனைவி மூலம் அறிந்த அலெக்சாண்டர், அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ.8,56,400-ஐ செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு எவ்வித பார்சலும் வரவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அலெக்சாண்டர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்து, தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.