தூத்துக்குடி: தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் சாந்திநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மு.முருகன் (60). இவர் தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையைத் திறந்தபோது கடைக்குள் பொருட்கள் சிதறிக் கிடந்தன.
மேலும், கடையின் பக்கவாட்டுச் சுவரில் பெரிய துளை போடப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார் 6 கிலோ எடை கொண்ட வெள்ளி நகைகள் மற்றும் 2 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. நள்ளிரவில் மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் விசாரணை நடத்தினார். தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.
தனிப்படை அமைப்பு
தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். நகைக்கடை லாக்கரில் 15 கிலோ வெள்ளி, 5 பவுன் தங்க நகைகள் இருந்தன. அந்த நகைகள் திருடர்கள் கண்ணில் படாததால் தப்பின. மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.