உதகை: உதகை அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் உதவிப் பேராசிரியையிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் பேசியதாக, தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் மீது எஸ்சி, எஸ்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக் கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பேராசிரியையாக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர், பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். கடந்த பிப்ரவரி மாதம் கல்லூரி முதல்வர், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் தர்மலிங்கம், உதவிப் பேராசிரியை உள்ளிட்டோர் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் உள்ள வகுப்புகள் குறித்த விவரத்தை சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது, பெண் உதவிப் பேராசிரியையிடம் பாலியல் ரீதியாக தகாத வார்த்தைகளால் தர்மலிங்கம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த உதவிப் பேராசிரியை, மறுநாள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.
விசாரணை குழுவுக்கு புகார் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகவும் தாமதமாக கடந்த மார்ச் மாதம் விசாரணைக் குழு விசாரணையை நடத்தியது. இதில், தொடர்புடைய தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர், சக பணியாளர்கள் மட்டுமின்றி, மாணவிகள் பலரிடமும் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும், தர்மலிங்கம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், கல்லூரி கல்வி இயக்குநரகம், மண்டல இயக்குநர் கல்லூரி கல்வி இயக்ககம், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறை ஆகியவற்றுக்கு, பாதிக்கப்பட்ட பேராசிரியை புகார் அளித்தார்.
இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் கூறும்போது, "டிஎஸ்பி தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. மேலும், உதவிப் பேராசிரியர் தர்மலிங்கம் மீது எஸ்சி, எஸ்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளில் உதகை நகர மத்திய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.