மயிலாடுதுறை: கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீஸார் கூண்டோடு வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சீர்காழி மதுவிலக்கு அமலபாக்கப் பிரிவுக்கு உட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி சாராயம் விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கு போலீஸாரும் துணைபோவதாகவும் சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், சீர்காழி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது குறித்து சாராய வியாபாரி ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழிக்கும் புகார்கள் வந்தன. இதையடுத்து, விசாரணை நடத்திய டிஐஜி, சாராய விற்பனையை கட்டுப்படுத்தாமல் வியாபாரிகளுக்கு துணை போனதாக, சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதாவை கடந்த 8-ம் தேதி பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, சீர்காழிமதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் உட்பட 16 பேர் கூண்டோடு நேற்று தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்ககளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
சீர்காழி மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பணியிடமாறுதல் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பார்த்திபன் இந்த காவல் நிலையத்தை பூட்டி, அதற்கான சாவியைஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்துஉள்ளார்.