க்ரைம்

திருநெல்வேலி | ஜுவல்லரி உரிமையாளரை தாக்கி நகை கொள்ளை வழக்கில் 5 பேர் கைது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நகைக்கடைஉரிமையாளரை அரிவாளால் வெட்டி நகைகளைத் திருடிச் சென்றது தொடர்பான வழக்கில், 5 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டன.

வீரவநல்லூர் கடைவீதியில் மைதீன் பிச்சை(60) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த11-ம் தேதி இரவு நகைகளை பையில் எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவரை வழிமறித்த ஒரு கும்பல், அவரைத் தாக்கி 4.5 கிலோ தங்கநகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக்கொண்டு தப்பியது. படுகாயமடைந்த மைதீன் பிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வழக்கில் அரிகேசவநல்லூர் சுதாகர்(18), மன்னார்கோயில் மருதுபாண்டி (20), காக்கநல்லூர் ஐயப்பன்(24) மற்றும் 2 இளஞ்சிறார்கள் ஆகிய 5 பேரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ 100 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT