க்ரைம்

குடிசைமாற்று வாரியத்தில் வீடு பெற்றுத் தருவதாகக் கூறி 75 பேரிடம் ரூ.9.61 கோடி மோசடி செய்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மண்ணடியைச் சேர்ந்த முனியசாமியிடம் (44). ராயபுரம் சரோஜா(40), புது வண்ணாரப்பேட்டை ஆறுமுகம் (45), ஈக்காட்டுத் தாங்கல் வெங்கடேசன் (41), திருவாரூர் மாவட்டம், காப்பனமங்கலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (35) ஆகியோர் 2017-ல் அயப்பாக்கம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய முனியசாமி, 3 குடியிருப்புகளுக்காக மொத்தம் ரூ.12 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர், முனியசாமிக்கு 3 குடியிருப்புகளுக்கான அரசு ஆணைகளை சரோஜா வழங்கியுள்ளார். ஆனால் அவை போலி ஒதுக்கீடூ ஆணைகள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸார், சரோஜா, ஆறுமுகம், வெங்கடேசன் ஆகியோரைக் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவின் மோசடி புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் இதேபோல 75 பேரிடம் பணம் பெற்று, போலி ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி ரூ.9.61 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஜெகதீஷ் தலைமறைவாக இருந்தார். அவரை தனிப்படை போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில், அவரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT