க்ரைம்

திருவள்ளூர் பகுதியில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0: ரூ.20 லட்சம் போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில், ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’என்ற சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு நேற்று முன்தினம் கிடைத்த ரகசிய தகவலையடுத்து தனிப்படை போலீஸார், கடம்பத்தூர் ரயில்நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த திமோதி, பிரித்திவி, ஸ்ரீராம், ரோஹன் ஆகிய 4 பேரிடம் சோதனையிட்டு 26 போதை மாத்திரைகள், ஒரு கிராம் போதை பவுடர், 26 போதை தரும் வில்லைகளை பறிமுதல் செய்தனர்.

பிறகு, பிரித்திவி உள்ளிட்டவர்கள் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் சென்னையைச் சேர்ந்த ஹரீஷ், லோகேஷ், நரேஷ் ஆகியோரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த திரிபுரா, ஆந்திரா மற்றும் சென்னையைச் சேர்ந்த சச்சின் சரவணன், வாசு, ரகுமான், கவுஸ்ருதீன், யூசுப் ஆகியோரிடமிருந்த 1,590 போதை மாத்திரைகளை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

12 பேர் கைது

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த கடம்பத்தூர் போலீஸார் 12 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவின் மதிப்பு ரூ.20 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT