க்ரைம்

மருத்துவ மாணவர்களின் லேப்டாப்பை திருடி வந்தவர் சிக்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர்களின் லேப்டாப்களை குறி வைத்து தொடர்ந்து திருடி வந்த பிரபல லேப்டாப் திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 31 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி மருத்துவம் பயின்று வரும் மாணவர்களின் லேப்டாப்கள் அடிக்கடி திருடு போயின. அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி, குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் செம்மஞ்சேரி, காமராஜர் நகரில் பதுங்கி இருந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர் திருவாரூரைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் (25) என்பதும், டெல்லியில் உள்ள பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு படித்துள்ளதும், மேலும் தொலை தூர கல்வி மூலமாக பி.எல். படித்து வருவதும் தெரியவந்தது. இவர் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர்களின் லேப்டாப்களை திருடியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது குறித்து போலீஸார் கூறும்போது, `‘தமிழ்ச் செல்வன், சென்னை மட்டுமல்லாமல் கேரளா, குஜராத், டில்லி போன்ற வெளிமாநிலங்களுக்குச் சென்று அங்கு உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களின் லேப்டாப்களை திருடி, அவற்றை விற்று கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவர் மீது கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் லேப்டாப் திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்றனர்.

SCROLL FOR NEXT