க்ரைம்

சேலம் காங். பிரமுகர் கொலை வழக்கில் 8 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது

செய்திப்பிரிவு

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (54). சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது வீட்டுக்குள் புகுந்த வடமாநில கொள்ளை கும்பல் தாளமுத்து நடராஜனை கொலை செய்து, வீட்டில் இருந்த 200 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயில்தர்சிங் (56) உட்பட 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்த ஜெயில்தர் சிங் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார்.

இதனால், அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, ஜெயில்தர் சிங்கை பிடிக்க கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், ஜெயில்தர் சிங் சென்னையில் வேறொரு வழக்கில் கைதாகி, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இதுபற்றி தகவலறிந்த சேலம் தனிப்படை போலீஸார் ஜெயில்தர் சிங்கை கடந்த 6-ம் தேதி கைது செய்து, சேலம் அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT