க்ரைம்

மனநிலை பாதித்த நெல்லை பெண் பலாத்கார வழக்கில் மதுரை ஹோட்டல் ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

செய்திப்பிரிவு

நெல்லையைச் சேர்ந்த மனநிலை பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மதுரை ஹோட்டல் ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சின்ன மூலக்கரையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(34). இவர் மது ரையிலுள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தார். 2013-ம் ஆண்டு வேலை முடிந்து மதுரை ரயில் நிலையப் பகுதிக்குச் சென்றார். அப்போது, அங்கு நெல்லையைச் சேர்ந்த மூதாட்டியும், மனநிலை பாதித்த அவரது மகளும் ஊருக்குச் செல்ல ரயிலுக்காக காத்திருந்தனர். அவர்களிடம் நானும் நெல்லையைச் சேர்ந்தவன்தான் என அறிமுகமாகி அவர்களுக்கு பாலமுருகன் தேநீர் வாங்கிக் கொடுத்துள்ளார்.

பின்னர் மூதாட்டி உறங்கிய நிலையில், மனநிலை பாதித்த பெண்ணுக்கு சாப்பாடு வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் ரயில் நிலையத்தில் விட்டுச்சென்றார்.

தாய், மகள் இருவரும் அதி காலையில் ரயிலில் ஏறி ஊருக்குப் புறப்பட்டபோது மனநிலை பாதித்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகரிக்கவே இருவரும் இறங்கி விட்டனர்.

மனநிலை பாதித்த பெண்ணை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்ததில் அவர் பாலமுருகனால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது தெரியவந்தது.

மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஹேமாமாலா விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம், மனநிலை பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாலமுருகனுக்ககு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பால முருகன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT