க்ரைம்

'லண்டன் பெண் குளோரியா...' - மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கோவை தொழிலதிபரிடம் ரூ.25.10 லட்சம் மோசடி

செய்திப்பிரிவு

கோவை: கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(46). தொழில் அதிபர். இவர், கோவை மாநகர காவல் சைபர் கிரைம் பிரிவில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதம் முகநூல் மூலம் ஒரு பெண்ணுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அந்த பெண், தான் லண்டனில் வசிப்பதாகவும், தன் பெயர் குளோரியா என்றும் தெரிவித்தார்.

மருந்து நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறிய அவர், தங்கள் நிறுவனத்தின் மூலிகை எண்ணெயை விற்பனை செய்ய தகுந்த டீலரை தேடி வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மூலிகை எண்ணெய் விற்பனை டீலராக இருக்க சம்மதம் தெரிவித்தேன். பின்னர், ‘இந்தியாவில் உள்ள ஒரு டிரேடிங் நிறுவனத்தில் இருந்து அழைப்பார்கள், அவர்கள் சொல்லும் தொகையை செலுத்தினால், மூலிகை எண்ணெய் டின்களை அனுப்பி வைப்பார்கள்’ என குளோரியா கூறினார். சில மணி நேரம் கழித்து ஒருவர் என்னைத் தொடர் கொண்டு, ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த கூறினார்.

நானும் தொகையை செலுத்தினேன். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் எண்ணெய் வரவில்லை. இதையடுத்து, நான் லண்டன் பெண் குளோரியா மற்றும் டிரேடிங் நிறுவனத்திலிருந்து பேசிய நபரின் மொபைல் எண்களை தொடர்பு கொண்ட போது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இது தொடர்பாக மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT