திருப்பூர்: பணத்துக்காக பின்னலாடை நிறுவன ஒப்பந்ததாரரைக் கடத்திய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (32). இவரது மனைவி மேகர் (28). இருவரும் திருப்பூர் காளம்பாளையத்தில் தங்கி பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பணி செய்து வருகின்றனர். சந்தோஷ் ஒப்பந்ததாரராக உள்ளார். கடந்த 1-ம் தேதி சந்தோஷ் இருசக்கர வாகனத்தில் திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். பிறகு வீடு திரும்பவில்லை. அன்றிரவு மேகரின் செல்போன் எண்ணுக்கு வீடியோ அழைப்பு மூலமாக பேசிய சிலர், சந்தோஷை கடத்தி உள்ளதாகவும், ரூ.2 லட்சம் வேண்டும் எனவும் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மேகர் உடனடியாக ரூ.25 ஆயிரத்தை அவர்களுக்கு செல்போன் செயலி வாயிலாக அனுப்பியுள்ளார். சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் மேகரை அழைத்த அந்த கும்பல், சந்தோஷை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து மேகர் ரூ.10 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் தொடர்ந்து மிரட்டவே மேகர் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில், தேனியில் ஒரு விடுதியில் சந்தோஷை கடத்தல் கும்பல் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்ற போலீஸார் சந்தோஷை மீட்டு 7 பேர் கொண்ட கும்பலையும் பிடித்தனர்.
அவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரயான் ஷேக் (24), ஒடிசாவை சேர்ந்த ரித்தோ (21), கரூரை சேர்ந்த சரவணன் (22), தேனியை சேர்ந்த தேவா (23), ஈஸ்வரன் (38) மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தினேஷ் (24), முத்துக்குமார் (29) என்பதும், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணி செய்த பழக்கத்தின் அடிப்படையில் சந்தோஷிடம் பணம் இருப்பதாக கருதி கடத்தியுள்ளனர். 7 பேரையும் நேற்று போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது.