கள்ளக்குறிச்சி அருகே உள்ள வானவரெட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகவும், கணித ஆசிரியராகவும் துளசிராமன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 3 மாதங்களாக இப்பள்ளியில் பயிலும் சில சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது. பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸார் நேற்று முன்தினம் வானவரெட்டி அரசு தொடக்கப் பள்ளிக்குச் சென்று துளசிராமனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி நேற்று உத்தரவிட்டார்.