க்ரைம்

'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' - போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் டிஜிபி உத்தரவின் பின்னணி என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க,‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’என்ற சிறப்பு நடவடிக்கை ஒருமாதத்துக்கு தொடங்கப்பட்டுள் ளது.

தமிழகத்தில் அண்மைக் காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து போதைப் பொருட்களின் விற்பனை, பதுக்கலைத் தடுத்து நிறுத்தும் வகையில், அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

மார்ச் 28 முதல் ஏப்.27 வரை

கடந்த 2021 டிசம்பர் முதல் கடந்த ஜனவரி வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக, இந்த மாதம் 28-ம் தேதி முதல் ஏப்.27 வரை ஒரு மாதம் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தவேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண் டும்.

குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது குண்டர்சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் பதுக்கல் மற்றும் விற்பனைசங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதைப்பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் நிலைய ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குழு ஒன்றைஉருவாக்கி, ரகசிய தகவல் சேகரிக்க வேண்டும். பார்சல் மூலம் மாத்திரை, போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களைக் கண்காணிக்க தனிப்படை அமைக்க வேண்டும்.

இந்த பணிகளை சட்டம் ஒழுங்குகூடுதல் டிஜிபி தினமும் கண்காணித்து மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்புதல் வேண்டும். அதேபோல், சென்னை,ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர்கள் நேரடியாக இந்தப் பணியில் கவனம் செலுத்தி தங்கள் அறிக்கையை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT