வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகேயுள்ள சீக்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (55). இவர், திருவலம் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு ஆசிரியர் முரளி கிருஷ்ணன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி இரு தினங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான புகாரின்பேரில் திருவலம் காவல் துறையினர் ஆசிரியர் முரளி கிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் முரளி கிருஷ்ணனை தற்காலிக பணி நீக்கம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தர விட்டுள்ளார்.