திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டையில் ஓடை பகுதியில் முனுசாமி என்ற சாமியார் கோயிலில் சிறப்புப் பூஜைகளும், பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையும் அளித்து வருகிறார்.
இந்த கோயிலில் கடந்த மாதம் 13-ம் தேதி இரவு நடைபெற்ற பூஜையில், திருவள்ளூர் அருகே செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஹேமமாலினி (20) என்ற கல்லூரி மாணவி பங்கேற்றார். மறுநாள் காலையில் அவர் திடீரென விஷமருந்தி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த மாதம் 16-ம் தேதி உயிரிழந்தார்.
தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர், திருவள்ளூர் ஆட்சியரிடமும் பெற்றோர் புகார் மனு அளித்தனர்.
பாஜக கோரிக்கை
கடந்த மாதம் 20-ம் தேதி ஹேமமாலினியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், ஹேமமாலினி தற்கொலை விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு குற்றம் இழைத்தவர் யாராக இருந்தாலும் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், ஹேமமாலினி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆகவே, விரைவில் சிபிசிஐடி போலீஸார் தங்கள் விசாரணையைத் தொடங்குவார்கள் என, காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா தெரிவித்துள்ளார்.