கோவை: கோவை சிறுமி, கன்னியாகுமரி இளம்பெண் ஆகியோரை கடத்திதலைமறைவாக இருந்த ஆசிரியர் 8 மாதங்களுக்குப் பிறகு போலீஸாரிடம் சிக்கினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கெங்கவல்லியைச் சேர்ந்தவர் மணிமாறன்(40). அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய இவர், 2019-ல் ஒழுங்கீன நடவடிக்கையால் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர், கடந்த ஆண்டு கோவை சரவணம்பட்டிக்கு வந்த மணிமாறன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அப்பகுதி மாணவ - மாணவிகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்தும், டியூஷன் எடுத்தும் வருமானம் ஈட்டியுள்ளார்.
ஒரு தம்பதி 10-ம் வகுப்பு படிக்கும் தங்களது 16 வயது மகளை டியூஷன் படிக்க மணிமாறனிடம் அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி டியூஷனுக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. மணிமாறன் கடத்தியதை அறிந்த சிறுமியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் போக்ஸோ, கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மணிமாறனின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி போலீஸார் விசாரித்தனர். அப்போது, கோவையில் இருந்து தப்பி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்துக்குச் சென்றுமணிமாறன் தங்கியதும், அங்கு 19 வயது இளம்பெண்ணை கடத்தியதும், அது தொடர்பாக கன்னியாகுமாி போலீஸாரும் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருவதும் தெரியவந்தது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் மணிமாறன் பதுங்கி இருப்பதை கண்டறிந்த சரவணம்பட்டி போலீஸார், நேற்று முன்தினம் திருப்பதிக்குச் சென்று அவரைப் பிடித்தனர்.
இதுதொடர்பாக, கோவை மாநகர போலீஸார் கூறும்போது, ‘‘கோவை சிறுமியுடன் மணிமாறன் கொடைக்கானல், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு, சுசீந்திரத்துக்குச் சென்று வாடகைக்கு வீடு பிடித்து தங்கியுள்ளார். அந்த வீட்டின் உரிமையாளருக்கு 19 வயதில் கல்லூரியில் படிக்கும் மகள் உள்ளார். பெற்றோர் தனக்கு அடிக்கடி வேலை கொடுப்பதாக அப்பெண் மணிமாறனிடம் கூறியுள்ளார். ஆறுதல் கூறுவது போலநடித்த மணிமாறன், அப்பெண்ணிடமும் ஆசை வார்த்தை கூறி, மூளைச்சலவை செய்துள்ளார். இதை நம்பிய இளம்பெண்ணும் வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு மணிமாறனுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். சிறுமி மற்றும் இளம்பெண்ணுடன் திருப்பதிக்குச் சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
ஒருகட்டத்தில் மணிமாறனின் பாலியல் தொந்தரவை தாங்கமுடியாமல் அவரிடம் இருந்து இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், முடியவில்லை. அப்போதுதான் இளம்பெண், தன் தோழியிடம் பேசி மணிமாறனின் தொந்தரவுகளை தெரிவித்து உள்ளார். இதையறிந்த தனிப்படை போலீஸார் மணிமாறனின் இருப்பிடத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர். மணிமாறனுக்கு முன்னரே இருமுறை திருமணமாகி உள்ளது. அவரது பாலியல் தொல்லை தாங்க முடியாமல் அவரது மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது” என்றனர்.