க்ரைம்

ஆப் மூலம் மூலம் கடன் வழங்கி கூடுதல் தொகை கேட்டு மிரட்டல்: கோவையில் மேலாளர் உட்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கி, கூடுதல் தொகை கேட்டு மிரட்டல் விடுத்த புகாரில், மேலாளர் உட்பட 4 பேரை சைபர் கிரைம் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுவாதி(30). தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

இவர், சமீபத்தில்ஆன்லைன் செயலி மூலம், விண்ணப்பித்து குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெற்றார். இந்த ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கும் பிரிவின் மேலாளராக பெங்களூரைச் சேர்ந்த அர்சியா அப்ரின்(24), துணை மேலாளராக ரகுமான் ஷெரீப்(24) ஆகியோர் பணியாற்றி வந்தனர். அதே நிறுவனத்தில், யாசின் பாஷா(27), பர்வீன் (31) ஆகியோர் கடன் தொகை பெற்றவர்களிடம், தொகையை வசூலித்து ஒப்படைக்கும் வேலையை செய்து வந்தனர்.

இந்நிலையில், சுவாதி கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸில் சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அதில், ‘‘ஆன்லைன் செயலி மூலம் கடனுக்கு வட்டித் தொகைகளை கட்டிவருகிறேன். ஆனாலும், அந்த செயலி பிரிவின் மேலாளர், துணைமேலாளர், பணம் வசூலிக்கும் பிரிவு ஊழியர்கள் ஆகியோர், என்னிடம் கூடுதல் பணம் கட்ட வேண்டும், இல்லையென்றால் என் ஆவணங்கள் போலியானவை எனக்கூறி அதை தடை செய்வோம். மேலும், ரிசர்வ் வங்கியில் புகார் அளித்து, எந்த வங்கியிலும் கடன் பெற முடியாமல் செய்து விடுவோம். எனவே, கூடுதல் பணத்தை கட்டுங்கள் என்று மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

அதன் பேரில் விசாரணை நடத்திய சைபர் கிரைம் பிரிவு போலீஸார், மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அர்சியா அப்ரின், ரகுமான் ஷெரீப், யாசின் பாஷா, பர்வீன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, நால்வரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT