பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சம். (வலது) கைது செய்யப்பட்ட குமார், அழகு, பழனிச்சாமி. 
க்ரைம்

மேலூரில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: 3 பேரை கைது செய்த தனிப்படை

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டம், மேலூரில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை (அம்பர் கிரீஸ்) தனிப்படை போலீஸார் நள்ளிரவில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலூர் - சிவகங்கை சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் எஸ்பி பாஸ்கரன் தலைமையிலான சிறப்பு தனிப்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்டவிரோதமாக திமிங்கலத்தின் எச்சத்தை சிலர் வாகனத்தில் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சிவகங்கையிலிருந்து நத்தம் நோக்கிச் சென்ற கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். காரில் நத்தம் பகுதியைச் சேர்ந்த அழகு(50), பழனிசாமி(45), குமார்(25) ஆகிய 3 பேர் இருப்பது தெரிய வந்தது. விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து மூவரையும் மேலூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மருந்துக்கு பயன்படுத்தும் விலையுர்ந்த திமிங்கலத்தின் எச்சத்தை (அம்பர் கிரீஸ்) காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான ‘அம்பர் கிரீஸ்’ எனப்படும் திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் ரூ.10 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது வனச் சட்டத்தின் கீழ் வருவதால் கைப்பற்றிய திமிங்கலத்தின் எச்சம், கார் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மூவரும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அம்பர் கிரீஸ் கிலோ ரூ.1 கோடி

20 வயதுக்கு மேற்பட்ட திமிங்கலங்கள் தங்கள் உடலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, அம்பர்கிரீஸ். கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளில் செல்வந்தர்களுக்கு உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு கிலோ ரூ.1 கோடி. இந்தியாவில் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அம்பர் கிரீஸ் விற்கத் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT