மதுரை: மதுரை பள்ளித் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் வழக் கில் ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மதுரை முனிச்சாலை ஜெயா தொடக்கப் பள்ளி ஆசிரியைகள் இருவர், கீரைத்துறை சுந்தரம்மாள் நடுநிலைப் பள்ளிக்கு மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், அந்த ஆசிரியைகளின் மாற்றுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து சுந்தரம்மாள் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் செயலர் ஜி.ஜோசப்ஜெயசீலன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜோசப்ஜெயசீலன் மீது சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் பாலியல் புகார் அளித்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஜோசப்ஜெயசீலன் மீது மதுரை நகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மனுதாரர் புகார்தாரர்களிடம் வாட்ஸ்அப்பில் பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து அந்த ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (மார்ச் 24) நீதிபதி ஒத்திவைத்தார்.