முகமது ஷயாத் 
க்ரைம்

20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: விளம்பர மாடலும், துணை நடிகருமான இளைஞர் கைது

செய்திப்பிரிவு

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக விளம்பர மாடலும், துணை நடிகருமான இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம், மில்லர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் முகமது ஷயாத் (26). விளம்பர மாடலாக உள்ளார். மேலும், துணை நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் மீது புளியந்தோப்பைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்று அளித்தார்.

அதில், ‘டெக்கரேஷன் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் வேலை செய்து வருகிறேன். 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் முகமது ஷயாத் பழக்கமானார். நண்பர்களாக இருந்தோம். இந்நிலையில், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என்று நம்பினேன்.

இந்நிலையில் 2020 டிசம்பர் மாதம் காரில் வைத்து வலுக்கட்டாயமாக என்னை பலாத்காரம் செய்தார். பலமுறை பணம் பெற்றுக்கொண்டதோடு திருமணம் செய்ய மறுத்து விட்டார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஓட்டல் ஒன்றுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அங்கிருந்த 3 பெண்கள் முகமது ஷயாத்தை திருமணம் செய்து கொண்டதாக கூறினர். இதனால், சந்தேகம் ஏற்பட்டு, அவரது (ஷயாத்) செல்போனை ஆராய்ந்தபோது சுமார் 20 பெண்களை, முகமது ஷயாத் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று அவர்களுடன் உறவு வைத்துள்ளது தெரியவந்தது.

எனவே, என்னை மட்டும் அல்லாமல் பல பெண்களை ஏமாற்றி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட முகமது ஷயாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகார் உண்மை என தெரியவந்ததை யடுத்து முகமது ஷயாத்தை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘முகமது ஷயாத் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், விளம்பர மாடலாக மாற்றுவதாகவும் கூறி பல பெண்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். பின்னர், ஆசை வார்த்தை கூறி தனி இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டுள்ளார். சில பெண்களிடம் மிரட்டி பணப்பறிப்பிலும் ஈடு பட்டுள்ளார். அதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

SCROLL FOR NEXT