க்ரைம்

கேரளாவில் மகன், மருமகள், பேத்திகளை தீ வைத்துக் கொன்ற முதியவர் கைது

செய்திப்பிரிவு

இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டம் சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் 79 வயது முதியவர் ஹமீது. இவருக்கும் இவரது மகனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஹமீதுவின் மகன் தனது மனைவி மற்றும் பள்ளி செல்லும் 2 பெண் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் முதியவர் ஹமீது நள்ளிரவில் வீட்டை வெளிப்புறத்தில் பூட்டிவிட்டு, வீட்டுக்கு தீ வைத்தார். இதில் நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பெட்ரோல் நிரப்பிய சிறிய பாட்டில்களை ஜன்னல் வழியே வீட்டுக்குள் வீசிவிட்டு, ஹமீது தீ வைத்துள்ளார். ஹமீது திட்டமிட்டு இந்தப் படுகொலையை செய்துள்ளார். வீட்டில் உள்ள யாரும் தப்பிக்கக் கூடாது என கருதி வீட்டின் தண்ணீர் டேங்க்கை முன்னரே காலி செய்துவிட்டார். அவர்களை மீட்பதற்காக அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுக்க, அதிலிருந்த வாளி மற்றும் கயிற்றை அகற்றிவிட்டார். சம்பவ இடம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. தந்தையும் இளைய மகளும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தடி இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்களை பிரிப்பது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது” என்றார்.

சம்பவத்துக்கு பிறகு உறவினர் வீட்டில் இருந்து ஹமீதை போலீஸார் கைது செய்தனர். ஹமீது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT