அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளரை போலீஸார் கைது செய்தனர்.
ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக் தலைமையில் நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற, திருநெல்வேலியைச் சேர்ந்த மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி, பிரதமர் மோடி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலர் கவுரிசங்கர், அதிராம்பட்டினம் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு, தஞ்சாவூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த ஜமால் முகமது உஸ்மானியை தஞ்சாவூர் அருகே வல்லம் சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் மறித்து கைது செய்தனர்.
அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை போலீஸ் நடவடிக்கை
இதேபோன்று, ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசியதாக மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது என அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைக் கண்டித்து மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஹிஜாப் விவகாரத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்தும், மதத்தின் பெயரில் மக்களிடையே விரோதம், வன்முறை, கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், மேலும் நீதித் துறையின் மாண்பையும், புனிதத்தையும் குலைக்கும் வகையில் பேசியதாகவும், நீதிபதிகளை மிரட்டும் வகையிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்டத் தலைவர் ஹபிபுல்லா, மதுரை மாவட்ட துணைத் தலைவர் அசன் பாட்ஷா ஆகியோர் மீது மதுரை தல்லாகுளம்போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களில் கோவை ரஹமத்துல்லாவை திருநெல்வேலி அருகே மேலப்பாளையத்தில் வைத்து மதுரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.