பெரம்பலூரில் கிரஷர் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர், திமுக வார்டு செயலாளர் உட்பட 6 பேர் மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சேசு பெர்னாண்டோ மகன் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ (45). இவர், துறைமங்கலத்தை அடுத்த கவுள்பாளையத்தில் கிரஷர் தொழிற்சாலை வைத்துள்ளார்.
கவுன்சிலர், நிர்வாகி
இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு கவுன்சிலரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளருமான தங்க.சண்முகசுந்தரம், 9-வதுவார்டு கவுன்சிலர் ஜெயப்பிரியாவின் கணவரும், அந்த வார்டின்திமுக கிளைச் செயலாளருமான மணிவாசகம் மற்றும் துறை மங்கலத்தைச் சேர்ந்த தென்றல் சரவணன், பிச்சை, அண்ணாதுரை, தங்கவேல் உள்ளிட்டோர், கிரஷர் உரிமையாளரான ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவிடம், கிரஷரில்இருந்து லாரிகள் மூலம் கற்களை ஏற்றிச் செல்லவும், தொடர்ந்து கிரஷர் தொழில் செய்யவும் தங்களுக்கு மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் எனக்கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அளித்த புகாரின்பேரில், நகராட்சி கவுன்சிலர் தங்க. சண்முகசுந்தரம், திமுக வார்டு செயலாளர் மணிவாசகம் உட்பட 6 பேர் மீது பெரம்பலூர் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.