க்ரைம்

கார் பார்க்கிங் பிரச்சினை: மூதாட்டிக்கு தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது

செய்திப்பிரிவு

சென்னையில், கார் பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக, மூதாட்டிக்கு பல்வேறு விதமாக பிரச்சினை கொடுத்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் டாக்டர் சுப்பையா சண்முகம்(58). இவர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர். மேலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவராக இருந்து வந்தார். அதே குடியிருப்பில் வசித்து வரும் வயதான மூதாட்டி ஒருவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. மூதாட்டிக்கு சொந்தமான கார் பார்க்கிங் இடத்தில் தொடர்ந்து மருத்துவர் சுப்பையா சண்முகம் காரை நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வயதான மூதாட்டிக்கு பல்வேறு விதமாக தொந்தரவுகளை கொடுத்துள்ளார். அதில் உச்ச பட்சமாக மூதாட்டியின் வீட்டில் சிறுநீர் கழித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் மூதாட்டிக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசித்து வந்த உறவினர் பாலாஜி விஜயராகவன் ஆதம்பாக்கம் போலீஸில் கடந்த 2020 ஜுலை 17-ம் தேதி புகார் அளித்தார்.

சுப்பையா சண்முகம் பெண்மணி வீட்டில் சிறுநீர் கழிக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்சுப்பையா சண்முகம் பெண்மணிக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்ததும், சிறுநீர் கழித்ததும் உண்மை என தெரிய வந்தது.

இதனையடுத்து ஆதம்பாக்கம் போலீஸார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கரோனா விதிமுறை மீறல், பொருட்கள் சேதப்படுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது.

அப்போது புகார்தாரரிடம் சமரசமாக பேசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் புகார்தாரரின் உறவினர் பெண்ணிடம் மிரட்டி கையெழுத்து பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன், பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆதம்பாக்கம் போலீஸார் வீட்டில் இருந்த டாக்டர் சுப்பையா சண்முகத்தை கைது செய்தனர்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளிமாணவி தற்கொலை செய்த விவகாரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் வீட்டின் முன்ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதற்கு தூண்டுகோலாக இருந்ததாகவும், போராட்டத்தில் கைதானவர்களை, அவர்கள் சிறையில் இருந்தபோது சென்று சந்தித்ததாகவும், அரசு வழிகாட்டு விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தலைவர் பணியில் இருந்து, இவரை மருத்துவ கல்வி இயக்குநரகம் பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT