சைபர் கிரைம் குற்றங்களில் படித்தவர்களே அதிகம் பாதிக்கப் படுவதாக கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்தார்.
இதுகுறித்து, செய்தியாளர்களி டம் நேற்று அவர் கூறியதாவது:
கோவை மாவட்ட சைபர் கிரைம்காவல் நிலையங்களில், பண மோசடி தொடர்பாக கடந்த 2021-ம்ஆண்டு 21 வழக்குகளும், நடப்பாண்டில் 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர்.
இதுவரை ரூ.18 லட்சத்து 57,787 தொகை பறிமுதல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. பண மோசடி தொடர்பான வழக்குகளில் ரூ.40லட்சத்து 81,113 தொகை முடக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்கள், குழந்தைகள் தொடர்பான சைபர் கிரைம் வழக்குகளில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு, 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் குற்றங்களில் முன்பு படிக்காதவர்கள் சிக்கி வந்தநிலையில், தற்போது படித்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடன் வழங்கும் செயலிகளை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து, நுழைவு அனுமதி கேட்புக்கு இசைவு தெரிவித்து இணையவழி மோசடிக்கு வழிவகுத்துக் கொள்கின்றனர். அதன் மூலமாக அலைபேசியில் உள்ள அனைத்து விஷயங்களையும் பார்க்கவோ, தேவையானதகவல்களை எடுக்கவோ முடிகிறது.
இதனை உருவாக்குவோர் மென் பொருள் துறையில் வல்லுநர்களாக உள்ளனர்.
எனவே, இதில் பொதுமக்களுக்கு நிச்சயமாக விழிப்புணர்வு வேண்டும். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கஎன்சிஆர்பி எனப்படும் சைபர் கிரைம் போர்டல் உள்ளது. அனைத்து வித சைபர் குற்ற புகார்களையும் இதில் பதிவு செய்யலாம்.நேரடியாகவும் சைபர் கிரைம் காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தி லும் புகார் அளிக்கலாம். 1930 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்தும் தகவலைத் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுகாசினி, சைபர் கிரைம் ஆய்வாளர் ஜெயதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தனிப்படைகள்
காவல் கண்காணிப்பாளர் மேலும் கூறும்போது, “மாவட்டம் முழுவதும் 50 இருசக்கர வாகனங்கள், 20 நான்கு சக்கர வாகனங்கள் ரோந்து பணியில் உள்ளன. பழைய குற்றவாளிகளைக் கண்காணிக்க ஒவ்வொரு உட்கோட்டத்துக்கும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக 3 முறை தொடர்ச்சியாக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.