திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த களக்காடு பகுதியில் பிரபல ரவுடி நீராவி முருகன் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (வயது 45). பிரபல ரவுடி. இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவரும், கூட்டாளியான பவானி ஈஸ்வரன் உள்ளிட்ட கும்பல் ஈரோடு மாவட்டம் பவானி போலீஸ் சரகத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீராவி முருகன் கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நீராவி முருகன் கும்பல் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த கும்பல் பதுங்கி இருந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர். அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் முயற்சித்தனர்.
அப்போது நீராவிமுருகன் உள்ளிட்ட கும்பல் காரில் ஏறி தப்ப முயன்றனர். அவர்கள் சென்ற கார் அருகிலுள்ள ரோட்டோர சாக்கடை கால்வாய்க்குள் சிக்கியது.
அந்த காரை போலீசார் சுற்றி வளைத்தபோது, நீராவி முருகன் அரிவாளால் போலீஸ் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொல்ல முயன்றார். சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் ரவுடிகள் சிலர் தப்பி ஓடிவிட்டனர். நீராவிமுருகனை துப்பாக்கியால் சுட்டதில் அவர் இறந்தார். கார் டிரைவர் மரிய ரகுநாத்தை போலீசார் கைது செய்தனர்.