ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, வசந்தம் நகரைச் சேர்ந்த சுந்தர்(29); ஆட்டோ ஓட்டுநர். ஆவடி, நேரு பஜார், மசூதி தெருவைச்சேர்ந்த அசாருதீன்(30); மீன்கடை ஊழியர். நண்பர்களான இருவரும் கடந்த 12-ம் தேதி இரவு ஆவடி, ஓ.சி.எப் மைதானத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
இதுகுறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இக்கொலை தொடர்பாக ஆவடி அருகே உள்ள கொள்ளுமேடுவைச் சேர்ந்த மணிகண்டன்(32), கோயில்பதாகையை சேர்ந்த பிரகாஷ்(25), சதீஷ்(25), மிட்னமல்லி விஜய்(26), அரக்கம்பாக்கம் பார்த்திபன்(22), எண்ணூரை சேர்ந்த மிட்டாய் அஜீத்(21), வினோத் என்கிற பிரகாஷ்(19), வியாசர்பாடி தனுஷ்(20), ஆரம்பாக்கம் பாமாலி(20) ஆகிய 9 பேரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது:
கைதான மணிகண்டன் கடந்த 2018-ம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்குத் தொடர்பாகச் சிறையில் அடைக்கப்பட்டவர். இவரது மனைவி பிரிசில்லாவுக்கும், ஆவடி, பெரியார் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெகன் (30) என்பவருக்கும் தகாத நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு ஜெகன், தனியாக பிரிசில்லாவை அழைத்துச் சென்று, குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரிசில்லாவின் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் ஜெகன் சிரமப்பட்டு வந்துள்ளார்.
ஆகவே, கடந்த 4-ம் தேதி ஜெகன், தன் நண்பர்கள் உதவியுடன், மணிகண்டனை ஆட்டோவில் கடத்தி சென்று, ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். மேலும், ஆந்திராவுக்குச் சென்று 2 கிலோ கஞ்சா வாங்கி தரும்படியும் ஜெகன் மிரட்டியுள்ளார்.
அப்போது மணிகண்டன், தான் தப்பிப்பதற்காக 10 நாட்களில் பணம் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, விடுவிக்கப்பட்ட மணிகண்டன், ஜெகனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
பின்னர், மணிகண்டன், ‘நான் பணம், கஞ்சா ஏற்பாடு செய்துவிட்டேன்’ எனக் கூறி, ஜெகனை ஆவடி, ஓ.சி.எப். மைதானத்துக்கு வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, கடந்த 12-ம் தேதிஇரவு ஜெகன் தன் நண்பர்கள் சுந்தர், அசாருதீன் ஆகியோருடன் ஓ.சி.எப். மைதானத்துக்கு வந்துள்ளார். அப்போது, மணிகண்டன் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் 8 பேர் ஜெகனை கொலை செய்ய முயன்றனர். அதை சுந்தர்,அசாருதீன் ஆகியோர் தடுத்துள்ளனர்.
இதனால், கோபமடைந்த கூலிப்படையினர் சுந்தர், அசாருதீன் ஆகிய இருவரைக் கொலை செய்தனர். இதற்கிடையில், ஜெகன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இவ்வாறு அந்த விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் கூறினர்.