தாம்பரம்: தாம்பரம் மின்வாரிய கோட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஃபோர்மேன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தாம்பரம் மின்வாரிய கோட்டத்தில் பல்வேறு நிலைகளில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் கடப்பேரி, குரோம்பேட்டை நியூ காலனி ஆகிய மின் உதவிப் பொறியாளர் அலுவலகங்களில் பணிபுரியும் 2 பெண்களுக்கு, தாம்பரம் கடப்பேரி மின் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஃபோர்மேன் ரமேஷ்பாபு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தாம்பரம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் பாலியல் தொல்லை சம்பவத்தைக் கண்டித்து நேற்று சென்னை தெற்கு-2 மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதனிடையே பாலியல் புகாருக்கு ஆளான ஃபோர்மேன் ரமேஷ்பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “பாலியல் தொந்தரவு தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தவுடன் அந்த புகார் உயரதிகாரிகள் மூலம் விசாகா கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வரும் 18-ம் தேதி புகார் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது, இதனிடையே சம்பந்தப்பட்ட ஃபோர்மேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.