அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரைக் கண்டித்து மாணவிகள் போராட்டம் நடத்தியதால், காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டது. பேராசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் உள்ள கல்லூரியில், புல்லுவிளையைச் சேர்ந்த வாசுதேவன் (45) என்பவர் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக, மாணவிகள் புகார் கூறிவந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவரின் செல்பேசிக்கு இவர் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். அது ஆபாச வார்த்தைகளுடன் இருந்ததால், மாணவியின் சகோதரர் கல்லூரிக்குள் புகுந்து, வாசுதேவனை தாக்கியுள்ளார். அப்போது அந்த இளைஞரை பேராசிரியரும் திருப்பித் தாக்கியுள்ளார்.
பேராசிரியர் வாசுதேவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி நிர்வாகத்திடமும், தென்தாமரைகுளம் காவல் நிலையத்திலும், மாணவிகள் புகார் அளித்தனர். பேராசிரியர் வாசுதேவன் நேற்று கல்லூரிக்கு வந்தபோது ஆத்திரமடைந்த மாணவிகள் வகுப்பை புறக்கணித்து, கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா மற்றும் போலீஸார் அங்கு வந்து, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையான நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நேற்று முதல் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. மாணவி கொடுத்த புகாரின்பேரில், 4பிரிவுகளின்கீழ் பேராசிரியர் வாசு தேவன் மீது தென்தாமரைகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாணவி தற்கொலை
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்த கணேசன் - மாடத்தி தம்பதியரின் மகள் இந்து பிரியா (18). புளியங்குடி அருகே டி.என்.புதுக்குடியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் தனது வீட்டுக்குள் இந்து பிரியா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை, புளியங்குடி போலீஸார் கைப்பற்றினர்.
கடிதத்தில், ‘கல்லூரிக்கு வேறொரு மாணவி செல்போன் கொண்டு வந்திருந்தார். அதைநான் (இந்துபிரியா) கொண்டுவந்ததாகக் கூறி சக மாணவிகள் மத்தியில் 2 பேராசிரியர்கள் திட்டினர். எனது தற்கொலைக்கு அவர்கள்தான் காரணம்’ என்று கூறி, அந்த பேராசிரியர்கள் இருவரின் பெயரையும் எழுதி வைத்துள்ளார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.