திருக்குறுங்குடி வடக்கு ரதவீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(33). அசாமில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த பிரேமா (25) என்பவரும் காதலித்து கடந்த 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019 முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். கடந்த 10 நாட்களுக்குமுன் விடுமுறையில் ஊருக்கு வந்த மாரியப்பன் சென்னையில் இருந்த பிரேமாவை சந்தித்து பேசினார். இருவரும் சமாதானம் அடைந்ததை அடுத்து, திருக்குறுங்குடிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், பிரேமா திடீரென்று காணாமல்போனது குறித்த தகவலின்பேரில் திருக்குறுங்குடி போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில் பிரேமா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, பெரியகுளம் பகுதியில் சடலம் புதைக்கப்பட்டது தெரியவந்தது. போலீஸார் அந்த இடத்தில் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாரியப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.